பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

கம்பராமாயணம்



“இராமனை அடைந்தால் பிறப்புக்கு விடுதலை கிடைக்கும்; பேரின்ப வீடு கிடைக்கும்” என்ற நம்பிக்கை யும் இவனுக்கு இருந்தது. இந்த இரண்டு காரணங்களால் இவன் இராவணனை விட்டு விலக முடிவு செய்தான். இவனுக்கு நெருங்கிய நேசமுடைய அமைச்சர்கள் நால்வரோடு கலந்து கட்சி மாறுதல் தேவை'” என்பதை உணர்ந்தான். பாசத்தை விட நேசம் இவனுக்குப் பெரிதாகப்பட்டது.

கடலைக் கடந்து கார் வண்ணன் இருக்குமிடம் சேர்ந்தான்; வீடணன் தமிழ்மண்ணில் கால்வைத்தான். அது இலங்கைவாசிக்குப் புகலிடம் தந்தது; ‘முன்பின் அறியாத முதல்வனாகிய இராமனை எப்படிச் சந்திப்பது? எப்படி அறிமுகம் செய்துகொள்வது? ஏற்புடைய கருத்துகளை எப்படி எடுத்துச் சொல்வது? பகைக் களத்திலிருந்து வந்தவனுக்குப் புகல் இடம் எப்படிக் கிடைக்கும்? அஞ்சி அஞ்சி அவனை அணுகினான்.

குரக்கினத் தலைவர் சிலர் வீடணனைக் கண்டனர்; ‘அவன் தீய எண்ணத்தோடுதான் வந்திருக்க வேண்டும்’ என்று எண்ணினர்; ‘அவனை இழுத்துப் பிடித்துக் கழுத்தை நெரித்துக் கொல்வதே ‘தக்கது’ என்று முடிவு செய்தனர்.

மயிந்தன், துமிந்தன் என்னும் பெயருடைய வானரத் தலைவர் வேறுவிதமாய் நினைத்தனர்; அங்க அழகு இலக்கணங்களை அவர்கள் அறிந்தவராய் விளங்கியதால், ‘அவன் அரக்ககுணம் அற்றவன்’ என்று முடிவு செய்தனர்; அறவாழ்க்கையும் நீதியின் பால் நெஞ்சமும் உடையவன்;