பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யுத்த காண்டம்

277



போரின் முழக்கம்

இலங்கைக்குப் படை சென்றது; சென்றது நேசக் கரங்கள் அல்ல; விநாசக் குரங்குகள்; அது அணி வகுத்துத் தொடர்ந்தது; இராமனும் இலக்குவனும் முன்னோடிகளாய் நடந்தனர்; வீடணன், சுக்கிரீவன், மற்றுமுள்ள படைவீரர் அவர்களுக்குத் துணை ஆயினர்.

வெட்ட வெளியை அவர்கள் தங்குமிடமாய்க் கொண்டனர்; சுற்றிலும் மாளிகைகள்; நடுவில் ஒரு பெரிய குன்று; அதில் நின்று எதையும் பார்க்க முடியும்; நளன் என்னும் பெயருடைய தச்சன் அந்தக் குன்றில் தங்க ஒரு பாடி வீடு அமைத்துக் கொடுத்தான்; இராமனுக்கு என ஒர் உயரமான பர்னசாலை அமைத்துத் தரப்பட்டது; அங்கு அவன் தம்பியோடு தங்கினான்.

போர்க் கதை தொடக்கமாயிற்று; இராவணன் ஒற்றர் இருவர் குரங்கு வடிவத்தில் அங்கு இறக்குமதி செய்யப் பட்டனர்; சுகன், சாரன் என்ற பெயருடைய அவ்வொற்றர் தாம் கற்ற மாயையால் தம்மை மறைத்துக் கொண்டு திரிந்தனர்; தம்மைக் குரங்குகள் என்றே கருதச் செய்தனர்.

“தேவரே அனையவர் கயவர்; இருவருக்கும் வடிவத்தால் வேறுபாடு இல்லை” என்பார் வள்ளுவர்; அக் குறள்பாட்டைக் காட்டவில்லை; வீடணன் மட்டும் அவர்கள் பால் ஐயம் கொண்டான். பாம்பின்காலைப் பாம்பு அறிந்தது; அனைவர் பார்வையும் அவர்கள்மீது மையம் கொண்டது.

அவர்கள் மந்திரதந்திரம் கற்றவர்; அவற்றை அறிந்து, வீடணன் வல்லவனுக்கு வல்லவனாய் விளங்கி, அவர்கள்