பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

கம்பராமாயணம்



முரசு அறைந்து உரசு போரைத் தொடரும் அறிவு அறை போகிய நெறி தவறிய காவலனுக்கு நீதி கூற விரும்பினான்; சொல்லின் செல்வன் அனுமன் வெல்லும் திறமை உடையவன் என்றாலும், அவனைத் துது அனுப்பாமல் அரசமகன் அங்கதனை அனுப்பிப் புதுமை தோற்று விக்க விரும்பினான்; “'அனுமனைத் தவிர வேறொரு ஆள் இல்லை; அவனே திரும்பி வருகிறான்; என்று பகைவர் குறைவாய் எடை போடக் கூடும்” என்பதால் ஆள்மாற்றத்தைச் செய்ய விரும்பினான்; வாலி மைந்தன் என்பதால் அவனுக்கு ஒரு தனி தகவு இருந்தது; அறிமுகமானவன் என்பதால் அதிகம் பேசத் தேவை இராது; இராவணனுடன் பேசுவதற்கும் தடைநேராது.

வருகை தந்த தூதுவனுக்கு வரவேற்புத் தரப் பட்டது; அங்கதன் தந்தையைக் கொன்றவனுக்கு வக்காலத்து வாங்க வந்திருப்பது இராவணனுக்கு வியப்பைத் தந்தது.

“தந்தையைக் கொன்றவனுக்கு ஆதரவு தேடவந்திருக்கிறாய்? இது விசித்திரமானது” என்றான்.

“வாலி ஆட்சிக்குச் சுக்கிரீவன் வேலிபோட்டுக் கொண்டான்; அதனை நீ கோலினால் உனக்கு வாங்கித் தருகிறேன்” என்றான். “சிங்கம், நாய் தரக் கொள்ளுமோ நல்லரசு? நீ தரும் ஆட்சியை நேர் என்று நான் கொள்ளேன்; நான் ஆட்சிக்கு வரவில்லை; இராமன் இல்லறமாட்சிக்கு வழிகோலவே வந்தேன்” என்றான்.

“சீதையைச் சிறைவிடு செய்; அக்கோதையை இராமனிடம் சேர்த்துவிடு; தையலை விட்டு அவன் சரணம் தாழ்க”.