பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்டம்

97



அவளுக்கு அழகு செய்தன; அவை அவள் பணிகேட்டுப் பதுங்கிக் கொண்டன! சேலை இது வரை கசங்கியது இல்லை; அது அவள் கண்களைப் போலக் கசங்கிக்காட்சி அளித்தது; கட்டிலில் புரண்ட அவள், தரையில் உருண்டாள்.

நள்ளிரவு வந்தது; கள்வர், காதல்வெறியர் உறங்காத நேரம்; யாழினும் இனிமை சேர்க்கும் குரலாள் கைகேயி; அவள் அந்தப்புரம் நோக்கி அயோத்தி மன்னன் அடலேறு போலச் சென்றான்; புதிய செய்தி சொல்லி, அவளைப் பூரிப்பு அடையச் செய்ய விரும்பினான்.

நிலைமை மாறிவிட்டது; அவள் அவல நிலை கண்டு கவலை கொண்டான் வேந்தன்; மானை எடுக்கும் யானையைப் போல அவளைத் தழுவி எடுத்தான்; அவள் நழுவி விழுந்தாள்; தரையில் தவழ்ந்தாள்; வானத்து மின்னல் தரையைத் தொட்டது; கட்டி அணைத்தான்; கொட்டிய தேளாகக் கடுகடுத்தாள் அவள்.

“'தேனே என்றான்; மானே என்றான்; தெள்ளமுதே உன்னை எள்ளியது யார்?” என்றான்.

“மங்கை உதிர்த்த கண்ணிர், அவள் கொங்கையை நனைத்தது; முத்துமாலை உதிர்ந்ததுபோல் இருந்தது; அவன், தன் அங்கை கொண்டு கண்ணிரைத் துடைத்தான்; அவள் தலையில் அடித்துக் கொண்டு பதைத்தாள்; பார் பிளந்தது போன்று ஒர் நினைவு அவனுக்குத் தோன்றியது; “யார் உமக்குத் தீமை செய்தவர்?” என்று வினவினான்.

“நீர் வாய்மை மன்னன்; வாய் தவற மாட்டீர் என்று கருதுகிறேன்” என்றாள்.