பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்டம்

109



நாம் காட்டுவாசிகள் அல்ல விருப்பப்படி நடக்க; பெற்றோரை மதிக்க வேண்டும்; அவர்கள் ஆணையைக் கேட்டு நடப்பதுதான் நம் கடமை” என்று கூறி இராமன் இலக்குவனை நெறிப்படுத்தினான். விவேகம் வேகத்தை அடக்கியது.

இலக்குவன் மழைநீர்பட்ட மலைக்கல் போலக் குளிர்ந்து ஆறினான். சூடு தணிந்தது; தன்னை அடக்கிக் கொண்டான்; தன் தமையன் கட்டளைக்கு அடி பணிந்தான்; அதன்பின் இராமன் நிழலாக அவன்பின் தொடர்ந்தான்; தன் தாய் சுமத்திரையைக் காணச் சென்றான்; இராமனும் அவனுடன் சென்றான்.

கைகேயி இராமனுக்காக அனுப்பி வைத்த மரவுரியை ஏற்று உடை மாற்றிக் கொண்டான், களம் நோக்கிச் செல்லும் போர் வீரனாக மாறினான்; தவக் கோலத்தில் தமையனைக் கண்ட இலக்குவன், கண் கலங்க நின்றான்; சுமத்திரை அவனைத் தட்டி எழுப்பினாள்.

“தமையனைக் கண்டு நீ கண்ணிர் விடுகிறாய்; அதனால் நீ அவனுக்கு அந்நியன் ஆகிறாய்; நீயும் புறப்படு; கோலத்தை மாற்று; வில்லை எடுத்து அவன் பின் செல்க! மரவுரி நான் தருகிறேன்; நீ உடுத்திக் கொள்; அதுதான் உனக்கு அழகு தரும்”

“இராமன் வாழும் இடம்தான் உனக்கு அயோத்தி; அவன்தான் உனக்கு இனித் தந்தை. சனகன் மகள் சீதைதான் உனக்கு இனி அன்னை, காலம் தாழ்த்தாதே; புறப்படு; இங்கு நிற்பதும் தவறு” என்றாள்.