பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்டம்

117



அமரர்களைப் போலவும், மணியிழந்த நாகம் போலவும், இளம் குஞ்சுகளை இழந்த தாய்ப் பறவை போலவும், நீரற்ற குளத்து மீன் போலவும் பிரிவால் வாடினாள்; நிலைதடுமாறினாள்.

“காக்க வேண்டிய மகன், தந்தையின் உயிர் போக்கக் காரணமாய் இருந்தானே” என்று வருந்தினாள்.

“நண்டும், இப்பியும், வாழையும், மூங்கிலும் சந்ததிக்காகத்தான் அழிகின்றன. தசரதனும் மகனுக்காகத் தன்னை அழித்துக் கொண்டான்” என்று ஆறுதல் அடைந்தாள்.

மேகத்தில் மின்னல் புரளுவதைப் போலத் தசரதன் மார்பில் கிடந்து புரண்டாள்; சுமத்திரையும் துன்பச் சுமையால் அழுது உயிர் தளர்ந்தாள். மகனைப் பிரிந்த பிரிவும், கணவனை இழந்த துயரும் அவர்களை வாட்டின.

வசிட்ட முனிவர் ஈமக் கடனைச் செய்து முடிக்கப் பரதனை அழைத்துவர நாள் குறித்து, ஆள் போக்கி ஒலை அனுப்பினார்.

வழி அனுப்பச் சென்ற நாட்டு மாந்தர், உறக்கத் தினின்று விழித்து எழுந்தனர்; தேர்ச்சுவடு கண்டு “கார்நிறவண்ணன் ஊர் திரும்பிவிட்டான்” என்று அவர்களும் அயோத்தி திரும்பினர்.

கங்கையைக் கடத்தல்

வனம் புகு வாழ்வு, மனத்துக்கு இனிய காட்சிகளைத் தந்தது. கதிரவனின் ஒளியில் அவன் கரிய மேனி ஒளிவிட்டுத் திகழ்ந்தது. சீதையும் உடன்வரக் காட்டு