பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்டம்

119



குகன் வருகை

அங்கே அவர்கள் இருக்கும் இடம்தேடித் தறுக்கு மிக்கவேடுவர் தலைவன் குகன் வில்லேந்தியவனாய் வந்து சேர்ந்தான்; அவன் கல்லினும் வலிய தோளினன். படகுகள் ஆயிரத்துக்கு அவன் நாயகன்; கரிய நிறத்தினன்; யானைக் கூட்டம் போன்ற அரிய சுற்றத்தினன்; சீற்றமின்றியும் தீயெழ நோக்கும் விழியினன்; கூற்றுவனும் அஞ்சும் குரலினன்; சிருங்கிபேரம் என்னும் நகர் மருங்கு வாழ்ந்துவருபவன், தேனும் மீனும் ஏந்தி, மானவன் ஆகிய இராமனைக் காண வந்தான்; அவன் தங்கியிருந்த தவப்பள்ளியின் வாயிலை அடைந்தான்.

“இறைவா! நின் கழல் சேவிக்க வந்தனன்” என்றான். இலக்குவன் அவனை மேலும் விசாரித்தான்.

மீனும் தேனும் இராமன் உண்டு பழக்கம் இல்லை; எனினும், அன்பன் கொண்டு வந்து அளித்தவை ஆதலின் அவற்றை வேண்டா என்று மறுக்கவில்லை.

“அன்புடன் படைத்தது; தின்பதற்கு இனியது” என்று கூறி ஏற்றுக்கொண்டான் “அமுதினும் இனியது” என்று பாராட்டினான்; “இதை யாம் ஏற்றுக்கொண்டோம்; அதுவே உண்டதற்குச் சமம்; நீர் மனநிறைவு கொள்ளலாம்” என்று கூறி அவற்றை அவர்களிடமே திருப்பித் தந்தான்; கண்ணப்பன் ஒப்பதோர் அன்பினை அவ்வேடன்பால் கண்டான்; காளத்தி வேடனாகக் கங்கை வேடனைக் கருதினான்.

“உன்னை இந்நிலையில் பார்த்த கண்ணைப் பிடுங்கி எறியாமல் இருக்கின்றேனே” என்று கூறி அங்கலாய்த்