பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

கம்பராமாயணம்



தான் குகன். அவன் ஆழ்ந்த அன்பு இராமனைக் கவர்ந்துவிட்டது. “யாதினும் இனிய நண்பனே என்னோடு இருப்பாயாக!” என்று குழைந்து அவனை ஏற்றுக் கொண்டான். குகன் தன் சேனையைச் சுற்றியும் காவல் செய்யுமாறு செய்து, தானும் உறங்காமல் கறங்கு போல் சுற்றி வந்து காவல் செய்தான்.

மறுநாள் பொழுது விடிந்தது; இராமன் காலைக் கடனை முடித்தான்; வேதியர் சிலர் அவனைத் தொடர்ந்து வந்தனர்; குகனைப் பார்த்து இராமன், “படகினைக் கொணர்க; “கங்கையைக் கடந்து அக் கரை போக வேண்டும்” என்றான்.

இராமன் மீது அக்கறை காட்டினான். “வனத்து வாழ்வை ஏற்றுத்தான் ஆகவேண்டுமா? இங்கே எங்களோடு கங்கைக் கரையிலேயே நங்கை சீதையோடு தங்கிவிடலாமே?”.

“காலமெல்லாம் இங்கே தங்கி வாழ்ந்து முடிக்கலாம்; இங்கே உங்களுக்கு என்ன குறை? நாங்கள் காட்டு மனிதர்தான்; எனினும், உம் பகைவர்க்கு உங்களைக் காட்டிக் கொடுக்கமாட்டோம்; உண்ண உணவு, உடுக்க உடை, தங்க உறையுள் இவற்றை அமைத்துத் தருகிறோம்.

“தேனும் தினையும், ஊனும் மீனும் உள்ளன; திரிந்து விளையாட விரிந்த காடுகள் உள்ளன. நீந்தி விளையாட நீர்நிறைந்த கங்கை நதி இருக்கிறது. உறுதுணையாகத் தறுகண்மை மிக்க எம் வீரர் உளர்; ஏவலுக்கும் காவலுக்கும் கணக்கற்ற வீரர்கள் இங்கே