பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்டம்

125



முடங்கல் கண்டதும் தடங்கல் இன்றிப் புறப் பட்டான் பரதன், இராமனைக் காணும் ஆர்வம் அவனை உந்தியது; இளயவன் சந்துருக்கனனும் உடன் புறப்பட்டான்.

பரதன் பயணம் ஏழுநாள் தொடர்ந்தது; எட்டாம் நாள் கோசல நாட்டை அடைந்தான்; அயோத்தியை அடைந்தான். ஆனால், அந்நாட்டை அவனால் காண முடியவில்லை. ‘கொடிச் சீலைகள் ஆடி அசைந்து அவனை வரவேற்கும்’ என்று எதிர்பார்த்தான்; அவை அரைக் கம்பத்தில் தொங்கி உயிருக்கு ஊசல் ஆடிக் கொண்டிருந்தன; “வண்ண மலர்கள் கண்ணைப் பறிக்கும்” என்று எதிர்பார்த்தான்; இவை வாடி வதங்கிச் சோககீதம் பாடிக் கொண்டிருந்தன; வயல்கள் உழுவார் அற்று ஊடல் கொண்ட பத்தினிப் பெண்டிராய் விளங்கின. பல நிறச் சேலை அணியும் உழத்தியர், நிலத்தில் புகுந்து களை பறிக்கக் கால் வைக்கவில்லை; உழவர்களின் ஏர்கள் துறவுக் கோலம் பூண்டு, மூலையில் முடங்கிக்கிடந்தன. குவளை மலர்கள் கண்திறந்து பார்க்க மறுத்துவிட்டன. தாமரை மலர்கள் தடாகங்களில் தலைகாட்டத் தவறி விட்டன; பாவையர் மொழிகளைப் பேசி, இச்சைப்படி மகிழும் பச்சைக் கிளிகள் மவுனம் சாதித்தன.

மகளிர் பூ இல் வறுந்தலையராய்க் காட்சி அளித்தனர். மாறிமாறி ஒலிக்கும் யாழும் குழலும் இசைப்பார் அற்று அசைவற்றுக் கிடந்தன; அரங்குகளில் ஆடல் மகளிர் அடியெடுத்து வைப்பதை நிறுத்திக் கொண்டனர்; நீர்நிலைகளில் வண்ண மகளிர் குடைந்து நீராடிப் பண்கள் மிழற்றுவதை நிறுத்திவிட்டனர்;