பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்டம்

127



“உன் தந்தைக்கு வானுலகத்தினின்று அழைப்பு வந்தது; மறுக்க முடியாமல் அவர் போய்விட்டார்” என்றாள்.

மங்கலமாகச் சொன்ன அச்சொற்களை அவனால் சுவைக்க முடியவில்லை.

“இது முதலில் தோன்றிய மின்னல்; அடுத்து இடி ஒலியும் கேட்டது.

“தவத்தை நாடித் தனயன் இராமன் வனத்துக்கு ஏகிவிட்டான்; பத்தினிப் பெண் ஆகையால், சீதையும் உடன் பயணம் மேற்கொண்டாள்; தம்பி யாகையால் அண்ணனை நம்பி இலக்குவனும் உடன் சென்றான்” என்றாள்.

முகத்திரை விலகியது; முழுமதியைக் காண வில்லை; பல்லவி முடிந்தது; அனுபல்லவி தொடர்ந்தது.

“உன்னை நாட்டுக்கு அரசனாக்கினேன்; என் வாழ்க்கை லட்சியம் நிறைவேறிவிட்டது” என்றாள்.

“பாலூட்டி வளர்த்தவள் பழிதந்து அழிப்பாள்” என்று அவன் எதிர்பார்க்கவில்லை; அமுது என நினைத்து ஆலகால நஞ்சை அவள் தந்திருப்பதை அறிந்தான்; “பாற்கடலில் அமுதம் அன்றி, நஞ்சும் பிறக்கும்” என்ற கதையை அவள் மெய்ப்பித்துவிட்டாள் என்பதை அறிந்தான்; பாசம் விளைவித்த நாசத்தை அறிந்தான்; தன் தாய் கொடுமை செய்வதில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள் என்பதை உணர்ந்தான்; மறுபடியும் அவள் முகத்தில் விழிக்க அவன் விழிகள் அஞ்சின; கோசலையிருக்கும்