பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்டம்

129



முனிவரோடு சென்று வாய்மை மன்னன் அறத்தின் திருஉருவைக் கண்டான்; விழுந்து அலறினான்; எண்ணெய் உண்ட எழில் மேனியைக் கண்ணிர் கொண்டு கழுவினான்.

“கருமக்கடன் செய்தல் தருமம்” என்று அவன் தொடங்கினான்; வசிட்டர் திருத்தம் கொண்டு வந்தார்.

“உனக்கு அருகதை இல்லை” என்றார்.

“அந்தச் சிறு கதை என்ன?” என்று கேட்டான்.

“நீ அவர் சடலத்தைத் தொடக்கூடாது, என்பது தசரதன் ஆணை; அவர் சாவுக்கு உன்தாய் காரணம் ஆதலின், நீ தொடக் தகாதவன் ஆகிவிட்டாய்” என்றார்.

“ஆட்சி உரிமை தந்த மன்னன் எந்த அடிப்படையில் தந்தான்? மகன் என்பதால்தானே! அதை எப்படி இப்பொழுது மறுக்க முடியும்? என்று வினவினான்.

“ஆட்சிக்கும் உரிமை இல்லை? என்பது இதனால் தெளிவாகிறது அன்றோ எனத் தெளிவுபடுத்தினான்.

“சத்துருக்கனன் எந்தத் தவற்றுக்கும் ஆளாக வில்லை; அவனே தக்கவன்” என்று வசிட்டர் கூறத் தம்பியைக் கொண்டு தணல் மூட்டித் தந்தையின் இறுதிக் கடனைப் பரதன் முடித்தான்.

நாள்கள் சில நகர்ந்தன; ஆள்கள் வந்து அவனைச் சூழ்ந்தனர்; அமைச்சர், அந்தணர், நகரமாந்தர் வசிட்டர் அவனை அணுகினர்.