பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

கம்பராமாயணம்


நீங்கிவிட்டது; மூவரில் ஒருத்தியாய் மாறி நின்றாள்; புதிய அலைகளில் அவளும் ஒருமிதக்கும் சருகானாள்; பரதனுக்குக் கைகேயி மரவுரி எடுத்துக் கொடுக்க வர வில்லை; வற்கலையை அவனே உடுத்திக் கொண்டான்; தவக்கோலம் தாங்கி நின்றான்; முடிவில்லாத துன்பத்துக்கு உறைவிடமானான்; தம்பியும் தவக்கோலம் பூண்டு, பரதனுக்கு ஒர் இலக்குவன் ஆனான்; இராமனை அழைத்து வருவது, அல்லது உயிர்விடுவது, அல்லது தாமும் தவம் செய்வது என்ற உறுதியோடு புறப்பட்டனர்; இராமன் இருக்கும் இடம் சேய்மையாகையால் தேர் ஏறிச் சென்றனர்.

தாய்மாரும், தவத்தைச் செய்கின்ற முனிவரும், தன் தந்தை போன்ற பெருமைமிக்க அமைச்சரும், வசிட்டரும், தூய அந்தணரும், அளவற்ற சுற்றத்தினரும் பின் தொடர்ந்துவர, அயோத்தி மாநகரின் மதிலைப் பரதன் அடைந்தான்.

நொண்டிக் குதிரை ஒண்டியாகச் செல்வதைப் போல நச்சு வித்தாய் விளங்கிய கூனியும் கூட்டத்தில் ஒருத்தியாய் துரிதமாய் முன்னோக்கி நடப்பதைச் சத்துருக்கனன் பார்த்தான்; அவளைத் துக்கி எறிந்து தாக்க எழுந்தான்; பரதன் அவனைத் தடுத்து நிறுத்தினான்.

“அவள் பயணம் தொடரட்டும்; அதைத் தடுக்க நாம் யார்? மூல நெருப்பு அவள்; முண்டெழுந்த செந்தழல் என் தாய்; பாசத்தால் என் தாயை நான் கொல்லாமல்விட விரும்பவில்லை; ‘இராமன்முன் விழிக்க முடியாதே’ என்பதால்தான் விட்டுவிட்டேன்; அந்தத் தவற்றை நீயும் செய்ய வேண்டா என்று கூறித் தடுத்தான்.