பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்டம்

137



கிடந்து பாவம் செய்தவன் நான்; இந்த உலகம் களை இழந்து, உயிர்ப்பு அடங்கி இருப்பதற்கு இவள்தான் காரணம்; இந்நிலையில் இடரே இல்லாத முகத்தினை உடையளாய் இவள் இருக்கிறாள் என்றால், இவளே என்னை “ஈன்றவள்” என்றான்.

தாய் என்பதால் இரக்கமற்ற அவளையும் குகன் கையெடுத்து வணங்கினான். தோணியை விட்டு இறங்கிய தாயர் மூவரும் சிவிகையில் ஏறினர். குகனோடு பரதன் காலால் நடந்தான். அனைவரும் பரத்துவாசர் இருப் பிடத்தை அடைந்தனர். அவர் இவர்களை இன்முகம் காட்டி வரவேற்றார்.

திருவடி சூட்டிய வரலாறு

பரத்துவாசர், ‘ஆள்வதை விட்டுக் காட்டுக்கு வந்தது ஏன்?’ என்றார்.

‘மாள்வதற்கு வழிதேடி வந்துள்ளேன்; முறை தவறி எனக்குத் தந்த ஆட்சியை நிறை மனத்தோடு இராமன் ஏற்றுக்கொள்ள வேண்டுதற்காக வந்தேன்; அவன் ஏற்றுக் கொள்ளாவிட்டால் யான் மாள்வது உறுதி’ என்றான் பரதன்.

முனிவர் மனம் குளிர்ந்தது; சேனையையும்; மற்றவர்களையும் வரவேற்று உபசரித்தார். அன்று இரவு அவர்கள் அங்குத் தங்கி இருந்தனர்; பொழுது விடிந்ததும் மறுநாள் பாலைவன வழியைக் கடந்து, அனைவரும் சித்திர கூடம் நோக்கிச் சென்றனர்.