பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்டம்

139



“ஐயா! நின் பிரிவு என்னும் துயரினால் மெய்யைக் காக்க வேண்டித் தன் மெய்யைவிட்டு அவன் மேல் உலகம் சென்றுவிட்டான்” என்றான் பரதன்.

“விண்ணிடை அடைந்தனன்” என்ற சொல் புண்ணிடை நுழைந்த வேல் போல் செவிபுகு முன்னர் கண்ணும், மனமும் சுழல மண்ணிடை விழுந்தான் இராமன், இடியேறு உண்ட நாகம்போல உணர்வு நீங்கினான்

இராமன் மனங்கலங்கிப் பலவாறு புலம்பினான்; “'நந்தா விளக்கனைய நாயகனே! தனியறத்தின் தாயே! அருள் நிலையே! எந்தாய்! பகை மன்னர்க்குச் சிங்க ஏறு போன்றவனே! நீ இறந்தனையே! இனி வாய்மைக்கு யார் இருக்கிறார்கள்? ஆட்சித் தலைமை இறக்கி வைத்து விட்டு நீ விரும்பிய ஒய்வு இதுதானா?! இதுதானா நீ செய்ய நினைத்த தவம்?” என்று கதறினான்.

இராமனை வசிட்டர் தேற்றத் தொடங்கினார்; பரத்துவாசரும், மற்றைய முனிவர்களும், அமைச்சர்களும், அரசர்களும், சேனைகளும் வந்து சூழ்ந்து கொண்டனர். அவர்கள் கூறிய ஆறுதல் மொழிகள் அவலத்தைத் தணித்தன. அவர்கள் இறுதிக் கடனை அவன் செய்கையால் செய்ய வேண்டினர்.

இராமன் புனலிடை மூழ்கினான்; சடங்கின்படி தருப்பண நீரை எடுத்துவிட்டான்; பின் பர்ண சாலைக்குச் சென்றான்.

உடன் சென்ற பரதன் சீதையின் கால்களில் விழுந்து அரற்றினான்; சீதை அவனை எடுத்து ஆற்றினாள்.