பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்டம்

141



கட்டளை ஏற்று அரசு ஆள்வாய்! இது நான் உனக்கிடும் ஆணை; மறுக்காதே” என்றான் இராமன்.

வசிட்டர் இராமன் ஆட்சியை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தினார்; “சூரிய குலத்து மன்னர்கள் முறை பிறழ்ந்தது இல்லை. மேலும் நான் தந்தையைப்போல மதிக்கத் தக்கவன், ஆசான், ஆசான் சொல்லைத் தட்டாதே! யான் இடும் ஆணையை ஏற்று உனக்கு உரிய நாட்டைப் பாதுகாப்பாய்” என்று கூறித் தன்னைத் தாழ்த்திக் கொண்டார்.

அம் ‘முனிவனைத் தொழுது’ “அறிஞ! ஒரு செயலைச் செய்வதாக ஒப்புக் கொண்டபின் அதனைக் கைவிடுவது அறமாகுமா, தாயும் தந்தையும் இட்ட கட்டளைகளை மேற்கொள்ளாத அற்பனாக நான் வாழேன்; அவர்கள் இட்ட பணியைத் தாங்கிச் செயலாற்றும்போது வேறுவிதமாக மாற்ற முனைவது நீதியாய்ப் படவில்லை; முறை தவறி நான் ஆட்சியைக் கைவிடுகிறேன் என்று சொல்கிறீர்; நீங்கள் முறை தவறி உரை செய்வதுதான் வியப்பாக உள்ளது” என்றான் இராமன்.

முனிவன் உரைத்தும் அவன் ஏற்கவில்லை என் பதை அறிந்த பரதன், முடிவாகத் தன் கருத்தைக் கூறினான்.

“அப்படியானானல் நாட்டை ஆள்பவர் ஆளட்டும்; நான் காட்டை மேவுதல் உறுதி” என்றான்.

“அது என் உரிமை, இதை யாரும் தடுக்க முடியாது” என்ற பரதன் உறுதியாக நின்றான்.