பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரணிய காண்டம்

147



தெய்வத் திருமகன்முன் உயிர்விட்டதால், பிறப்பு ஒழிந்த இறப்பு, அவனுக்குக் கிட்டியது. அவன் மனைவியும் அப் பெருநிலையை விருப்புடன் ஏற்றுக் கொண்டாள்.

தமிழ் முனிவர் அகத்தியர் சந்திப்பு

சரவங்கன் இறுதி யாத்திரை இராம இலக்குவரைத் துயரத்தில் ஆழ்த்தியது. சரவங்கனது ஆசிரமத்தைவிட்டுச் சுமை நீங்கிய உணர்வோடு மெதுவாய் அவர்கள் நடந்தனர்; விண்ணை முட்டும் மலைகளையும், பசுமை நிறைந்த மரங்களையும், கடுமையான பாறைகளையும், ஒடும் நதிகளையும், சரியும் சாரல்களையும், நீர்த் தடாகங்களையும் கடந்தனர்; வழி நெடுக அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சந்தித்தவர் தாம் அடைந்து வரும் இன்னல்களை எடுத்துரைத்தனர். அரக்கர் இழைக்கும் அநீதிகளை எடுத்துக் கூறி, அவர்களை அழித்து அறம் தழைக்கச் செய்ய வேண்டும்” என்று வேண்டினர்.

“நாட்டை விட்டுக் காட்டை அடைந்ததும் ஒரு வகையில் நல்லதாயிற்று” என்று இராமன் கருதினான். வருந்தி வாடும் அருந் தவசியர் இடையில் அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களை மகிழ்வித்தான். எந்தவித இடையூறும் இன்றி, இனிமையாய்ப் பத்து ஆண்டுகள் அவர்களைக் கேளாமலே கழிந்து சென்றன. .

வேதம் கற்ற முனிவரிடைப் பழகிய இராமன், தமிழ் கற்ற அகத்தியரைக் காண விரும்பினான். அகத்தியர் இருக்கும் இடம்தேடி நடந்தான். கதீக்கணன் என்னும் முனிவனைச் சந்தித்து, அகத்தியர் வாழும் மலையை அறிய விரும்பினான்.