பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரணிய காண்டம்

151



தசரதனுக்காக ஒரு பறவை அரசன், அழுது அரற்றியது அதிசயமாக இருந்தது. அவனைப் பற்றி அறிய அவாவினர்.

“சூரியன் தேர் ஒட்டி ஆகிய அருணன் அருமைப் புதல்வன் யான்; சூரியன் சுற்றி வரும் உலகம் முற்றும் திரிந்து பறந்து வாழ்பவன்; தசரதன் என் இனிய நண்பன். தேவர்களோடு மற்றச் சாதிகளை வகைப்படுத்திய ஆதி காலத்திலேயே வந்து உதித்தவன் நான்; கழுகுகளுக்கு மன்னன்; என் உடன் பிறந்தவன் சம்பாதி; அவன் எனக்கு இளையவன்; சடாயு என்பது என் பெயர்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.

பொன்னுலகு புகுந்த பெரியோனாகிய தசரதனே உயிரோடு திரும்பி வந்ததைப் போல, அவனைக் கண்டு இராமன் களிப்பு அடைந்தான். பாசத்தோடு தன் இரண்டு இறகுகளால் அவர்களைச் சடாயு அணைத்து அன்பு காட்டினான். “என் ஆருயிர் நண்பன் என்னை விட்டு அகன்ற பிறகு யான் உயிர் வாழ்தல் சரியன்று; சுமை மிக்க வாழ்வில் யான் சுவை காண இயலாது. யானும் தீயில் விழுந்து மாயாவிட்டால் என் துன்பத்திற்கு விடிவே இல்லை” என்று அரற்றி அலறினான். அவனைத் தேற்றி அன்பு மொழி கூறி, அவனிடம் உறவு கொண்டனர்.

“எங்களுக்கு உதவ வேண்டிய எம் தந்தை, உயிர் விட்டுப் புகழைத் தேடிக் கொண்டார்; மெய்யைக் காத்து வந்தவர் தம் மெய்யைவிட்டு நீங்கினார். துன்பம் நேர்கையில் இன்பம் சேர்க்கும் உறுதி மொழிகளை எடுத்துக்கூற, உம்மைத் தவிர இன்று யார் இருக்கிறார்கள்?