பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

கம்பராமாயணம்



அவற்றோடு அவளை ஒப்பிட்டு இராமன் நலம் பாராட்டினான். தாமரை மலரில் இரண்டு சக்கரவாகப் பறவைகள் தங்கி இருந்தன. அவை சீதையின் அழகிய வடிவை அவனுக்கு நினைவுப்படுத்தின. மணற்குன்றுகள் இராமன் தோள்களாக விளங்கின. அன்னப் பறவைகள் சீதையின் நடையைக் கற்றன. களிறுகள் இராமன் பெருமிதத்தைக் கண்டு ஒதுங்கின. வஞ்சிக் கொடி இடைக்குத் தோற்றது. தாமரையின் நிறம், மங்கிக் காட்சி அளித்தது. அன்புக் காட்சிகள் அவர்களுக்கு மவுன ராகமாய் இசைத்தன. அழகுக்கும் இனிமைக்கும் பங்கமில்லாது அந்தச் சோலையில் இலக்குவன் வடித்துத் தந்த குடிசையில் தங்கி இருந்தனர்.

இலங்கைக்கு அரசன் இராவணன் ஒரே தங்கை சூர்ப்பனகை அங்கு வந்து சேர்ந்தாள். அப் பருவ மங்கை இராமன் உருவில் மயங்கினாள். அரக்கியாகச் சென்றால் “கிறுக்குப் பெண் என்று நறுக்குவர் என அரம்பை வடிவில் அவன்முன் நின்றாள்; திருமகளைத் தியானிதித்து அவள் உருவைத் தான் பெற்றுக் காட்சி அளித்தாள்.

“பஞ்சுஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சம்நிகர் சீறடியளாகி
அஞ்சொல்இள மஞ்ஞைஎன அன்னமென மின்னும்
வஞ்சிஎன நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்”

செம்பஞ்சு பூசிய சிவந்த அடிகள், தாமரை மலரைப் போலக் காட்சி அளிக்க அன்ன நடையும், வஞ்சிக் கொடி போன்ற மின்னல் இடையும் கொண்டு நஞ்சு எனத் தகைய வஞ்ச்மகள் நடன சிங்காரியாக நளினமாக அவன் முன் வந்து நின்றாள்.