பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரணிய காண்டம்

155



விண்ணவர் படைத்த அமுதம் போன்ற கண்கவர் கன்னியைக் கண்டு இராமன் வியந்தான். “காட்டு வாழ்க்கையில் மேட்டுக் குடிமகள் இவள் யார்?” என அறிய விழைந்தான்.

பதுமைபோல வந்த அப் புதியவளைப் பார்த்து, “ஆரணங்கே நீ யார்? வழி தெரியாமல் உன் விழிகள் இங்கு வந்து நோக்குகின்றனவா?” என்று பரிவுடன் வினவினான். வாய்ப்பை எதிர்பார்த்து அவள் வாய்மையை மறைத்துப் பொய்மையைப் புனைவுடன் கூறினாள்.

“நான் அளகை நகர்க் காவலன் குபேரனுக்கும் இலங்கை வேந்தன் இராவணனுக்கும் தங்கை; அழகு மிக்கவள் ஆகலின், என்னைக் ‘காமவல்லி’ என்று அழைப்பர்”.

“அரக்கர் குலத்தில் அரம்பை எப்படி அவதரிக்க முடியும்”? என்று கேட்டான் இராமன்.

“சேற்றில் முளைத்த செந்தாமரை நான்” என்றாள்.

“நிலத்தில் வந்தது ஏன்?”

“நிம்மதி இழந்ததால்; உன் சம்மதம் வேண்டி உன்னை மணக்க” என்றாள்.

“நீ மலைத்தேன்; நான் முடவன்” என்றான்.

“காதலித்தேன்; அதனால் என்னைக் குருடி என்பர்”.

“சாதி ஒரு தடை” என்றான்.

“நான் கலப்பு மகள்; இது என் பிறப்பு வரலாறு” என்றாள்.