பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

கம்பராமாயணம்



பொழுது சாய்ந்தது. உள்ளத்தில் வெறுமை நிறைந்தது. இரவு நீண்டதாக அவளுக்கு இருந்தது. பொழுது விடிவில் தன் விடிவைக் காணக் காத்துக் கிடந்தாள். எப்படியாவது அவனை அடைவது என்று உறுதி கொண்டாள். இருள் அவளுக்கு மருளினைத் தந்தது. விரகவேதனையால் நரகவேதனையை அடைந்தாள்.

உறக்கம் நீங்கிய இராமன் காலையில் தன் கடனை முடிக்கக் கோதாவரிக் கரையை அடைந்தான். நித்தியக் கடனை முடித்து இறைவனை வழிபட்டு நிறை உள்ளத்தோடு வீடு திரும்பினான். அவன் புத்தம் புதுப் பொலிவோடு விளங்குவது அவள் பெருவிருப்பைத் தூண்டியது. சீதை குறுக்கிட்டதால் அந்தப் பேதை தன்னைத் துறந்தான் என்று தவறாகக் கணக்குப் போட்டாள். அவள் வாழ்க்கை, ஒருதலை ராகமாக மாறியது; அவள் ஒரு தறுதலையாக மாறினாள்.

சீதை அவளுக்கு நந்தியாகக் காணப்பட்டாள். மந்தி போன்ற அவள் நந்தியாகிய சீதைமீது பாய்ந்து மறைத்து விடுவது என்று துணிந்தாள்.

காவல் செய்து காத்துக் கிடந்த காகுந்தன் தம்பியை அவள் கவனிக்கவில்லை; ‘தனித்து இருக்கிறாள்’ என்று துணிந்து அவளைப் பற்றி இழுக்க முயன்றாள். மெய்ப்படைக் காவலன்போல இருந்த இலக்குவன் அவள் செய்கை பொய்ப்படும்படி அவள் மயிர் முடியைக் கரத்தால் பற்றி அவளைக் ‘கரகர’ என்று இழுத்து வெளியேவிட்டான். ‘முதலுக்கு மோசம் வந்துவிட்டது'