பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரணிய காண்டம்

159



என்று கூறும்படி இலக்குவனையே அவள் கைப்பற்றி அந்தரத்தில் இழுத்துச் செல்லப் பார்த்தாள். அந்த்ச் சுந்தரத் தோளனுக்கு அவளை அழித்து ஒழிப்பதைத் தவிர வேறு வழி தோன்றவில்லை. “பெண் கொலை புரிந்தால் மண்ணுலகம் அவனைப் பழிக்கும்” என்பதால் தயக்கம் காட்டினான்; உயிரைப் பிரிக்க விரும்பவில்லை. அவளுக்குத் தக்க பாடம் கற்றுத்தர விரும்பினான்.

“அழகு காட்டி தன் அங்கங்களால் மயக்க முற்படுகின்றவளின் அழகைக் குலைப்பதே செய்யத் தக்கது” என்ற முடிவுக்கு வந்தான். மூக்கும் செவியும் முகத்துக்கு அழகு தருவன. வளம் மிக்க இளமையைக் காட்டும் நகில் அவளுக்கு ஆணவத்தை உண்டாக்கி இருக்கிறது. மூக்கையும் செவியையும் முன அறுத்தால் அது அவள் நாக்கை அடக்கும் என்று உறுதி கொண்டான். “வலிதிற் பற்றும் வாலிப மங்கையாகிய அவள் அங்க இலக்கணம் பங்கம் அடைதல் தக்கது” என்று மூக்கையும் செவியையும் மூளி ஆக்கினான்; குருதி கொட்டியது; அருவி வடியும் மலைபோலக் காட்சி அளித்தாள்; அரக்க வடிவம் அவளைக் காட்டிக் கொடுத்தது.

கருப்பு நிறக்காரிகை விருப்பு மிகச் சிவப்பு நிறம் பெற்றாள்; செக்கர் வானம் படிந்த செம்மலையானாள்; செம்மலை அடையச் சிவந்த அவ்வடிவம் பயன்படும் என்று கருதினாள்.

நதி நீராடி இறைவழிபாடு செய்து நிறை மனத்தோடு வீடு திரும்பிய இராமன் குறையுற்ற இந் நங்கையைக்