பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

கம்பராமாயணம்



கண்டான். அவளும் சூரியனைக் கண்ட தாமரை போல் உவகை கொண்டாள். அவள் அவன் கண்ணில் பட்டாள். நடந்ததை அவள் போக்கிலேயே அவன் தெரிந்து கொண்டான்; இது தம்பியின் சித்திர வேலைப்பாடு என்பதை அறிந்து கொண்டான்.

உறுப்பிழந்த நிலையிலும் அவள் உள்ளம் குலையவில்லை. “விருப்புற்றுக் கேட்கிறேன்; என்னை ஏற்றுக் கொள்” என்றாள்; “பொறுப்பற்ற உன் சொல் உன்னை அரைகுறை அழகி ஆக்கிவிட்டது. அறுவைச் சிகிச்சை நடந்தும் அறிவு பெறாத வளாய் இருக்கிறாய்; தீயவளே விலகு என்றான்.

அவள் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி மீண்டும் மீண்டும் வேண்டினாள்.

“இராவணன் பொல்லாதவன்; அவன் தங்கை நான்; அங்கம் அறுத்த உங்களை உயிரோடு தங்க வைக்க மாட்டான்; இது உறுதி”.

“நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டால் அரக்கர் அழிவிற்குத் துணையாய் நான் இருப்பேன்”.

“நீ ஏற்கனவே மணமானவன்; அதனால் என்னை ஏற்க மறுக்கலாம்; உன் தம்பிக்கு என்னை ஏற்றுக் கொள்ளச் சொல்”.

“எனது மூக்கை அறுத்துவிட்டீர்; என்னை நீர் ஏற்றுக் கொண்டால் மூக்கை மறுபடியும் உண்டாக்கிக் கொள்வேன்; முழு அழகையும் பெறுவேன்; அதிக மான நெடிய மூக்கும் மடந்தையர்க்கு மிகைதானே”.