பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரணிய காண்டம்

163



வீராவேசம் கொண்டு வில்லை வேகமாக வளைத்தான்; அது முறிந்து விட்டது.

வில்லிழந்து இராமன், நிராயுத பாணியாக ஆகி விட்டான். அடுத்து என்னை நடக்குமோ? என்று அஞ்சும் சூழ்நிலை ஏற்பட்டது. பரசுராமனிடமிருந்து பெற்ற மாபெரும் வில்லை வருணனிடம் கொடுத்திருந்தான்; அதற்காகக் கைநீட்டினான்; வருணன் கொண்டுவந்து சேர்த்தான்; அந்த வில் அவனுக்குக் கைகொடுத்தது: அதனால் ஏவிய அம்பு, கரனின் உயிரைக் குடித்தது.

சூர்ப்பனகை செயலிழந்து வயிற்றிலும் வாயி லும் அடித்துக்கொண்டாள்; மூக்கோடு தான் முடிந் திருக்கலாம்; வாக்கினால் கரன் உயிர் குடித்தமைக்கு வருந்தினாள்; எனினும், அந்தத் துன்பம் நீடித்திருக்கவில்லை; இராமனை அடைய வேண்டுமென்ற ஆசை அவளை வெறி கொள்ளச் செய்தது; “இராவணனிடம் சென்று இராமனைப் பிடித்துத்தரும்படி கேட்கலாம்” என்று நினைத்த வண்ணம் இலங்கை நோக்கி விரைந்தாள்.

இராவணன் தன் அத்தாணி மண்டபத்தில் கொலு வீற்றிருந்தான், ஊர்வசி, திலோத்தமை முதலிய தெய்வ மகளிர் நடனமாடினர். அவன் செல்வக் களிப்பிலும் காமக் களிப்பினும் தன்னை மறந்து தருக்கோடு வீற்றிருந்தான். தன்னை வெல்வாரும் கொல்வாரும் இன்றித் தரணியை ஆண்ட காவலன் அவன்.

இலங்கை நகரின் வடக்கு வாயிலில் மூக்கிலும் செவியிலும் குருதி கொட்டச் சூர்ப்பனகை முறையிட்டுக் கொண்டே வந்தாள். அந்நகர் அரக்க மகளிர் இதைக் கண்டு