பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

கம்பராமாயணம்


வயிற்றில் அடித்துக் கொண்டு இரங்கி அழுதனர். இராவணன் தங்கை மூக்கு அற்றுத் துணையின்றிப் போக்கற்று வந்திருப்பதை அவர்கள் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இலங்கை அரசன் கால்களில் விழுந்து புரண்டாள்; வேந்தன் இதைக் கண்டு. அதிர்ச்சியும் ஆவேசமும் கொண்டான், இடியொலிபோல் பேரார வாரம் செய்து, “யாவர் செயல்?” என்று கேட்டான்.

“கானிடை அடைந்து காவல் புரிகின்ற வீரர் இருவர், மன்மதனைப் போன்ற அழகு உடையவர்; அவர்கள் மானிடர்தான் எனினும் மாஇடர் செய் துள்ளனர்; வாள் உருவித் தடிந்தனர்” என்றாள்.

“மானிடருக்கு இத் துணிவு வாராது; நீ ஏதோ பெரிய தவறு செய்திருக்கிறாய்; அதனால்தான் அவர்கள் பொறுக்க முடியவில்லை இந்த எல்லைக்குச் சென்று இருக்கிறார்கள்; நடந்ததை அச்சமின்றிச் சொல்” என்று கேட்டான்.

“உருவிலே மன்மதனை ஒப்பர்; தோள் வலிமை யில் மேருமலையை நிகர்ப்பர்; முனிவர் வாழ்வில் அவர்கள் அக்கறை கொண்டவர்; வில்லாற்றலும் வீரமும் உடைய அவர்கள் உன்னைத் துரசாக மதிக்கின்றனர்; அரக்கரை வேரோடு அழிக்க உறுதி பூண்டுள்ளனர்; அவர்கள் தசரதன் புதல்வர்; இராமன் இலக்குவன் என்பன அவர்கள் பெயர்கள்” என்றாள்.

“அங்கிருந்த நம் இனத்தவர் அவர்களை எப்படி விட்டு வைத்தனர்?” என்று கேட்டான்.