பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரணிய காண்டம்

173



இராமன் தானே சென்று பிடித்துத் தருவதாயும் பர்ணசாலையில் சீதைக்குக் காவலாய் இலக்குவனை இருக்குமாறு கூறி வில்லும் அம்பும் ஏந்தி, அதன்பின் சென்றான்; அது ஒட்டம்காட்டியது; கிட்டுவது போலக் காட்டி, எட்டி எட்டிச் சென்றது.

அது மாயமான் என்பதை இராமன் உணரத் தொடங்கினான்; இலக்குவன் முன்கூட்டி உரைத்தது குறித்து வியந்தான்; அவனைப் பாராட்டினான்.

மாரீசனும் இராமனை நெடுந்துரம் விலக்கி விட்ட தால், தன் கடமை முடிந்துவிட்டது என்று உணர்ந்தான்; ‘இனி அவன் அம்புக்குத் தப்பமுடியாது’ என்பதால் தப்பித்துக் கொள்ள நினைத்தான்; அதனால் வானை நோக்கிப் பாய்ந்தான்; அவனுக்கு முடிவு கட்டத் தன்கூரிய அம்பினை இராமன் செலுத்தினான்.

மாயமான் மாய்ந்தது; மாரீசன் அதினின்று வெளிப்பட்டு விழுந்தான்; இராவணன் சொல்லிக் கொடுத்தபடி இராமன் குரலில் “ஆ! சீதா இலக்குமணா” என்று அபயக் குரல் கொடுத்து அழைத்துப் பின் உயிர் விட்டான்.

இராமனுக்கு அவன் சூழ்ச்சி விளங்கியது; “கூப்பிட்ட குரலில் ஏதோ சூழ்ச்சி இருக்க வேண்டும்” என்பதை உணர்ந்தான்; விரைவில் பர்ணசாலை நோக்கி விரைந்தான்; இலக்குவன் விழிப்போடு காவல் புரிவான் என்ற நம்பிக்கையோடு இருந்தான்; எனினும் சூழ்ச்சி உருவெடுப்பதற்குமுன் திரும்புவதில் வேகம் காட்டினான்.