பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

கம்பராமாயணம்



சடாயு உயிர் நீத்தல்

மாரீசன் கூவல் சீதையின் செவியில் பட்டது; ‘இராமனுக்கு ஏதோ கேடு நிகழ்ந்து விட்டது, என்று தவறாய் நினைத்தாள்.

‘மானைப் பிடித்துக்கொடு, என்று சொன்னது எவ்வளவு அறிவீனமான செயல்’ என்பதை எண்ணி நொந்து கொண்டாள்; வெளியில் நின்று கொண்டிருந்த இளயவனை நோக்கி ‘அண்ணன் அலறல் கேட்டு நீ இங்கே நின்று கொண்டிருக்கிறாயே! தகுமா?” என்று கண்டித்தாள்.

‘இராமனை எதிர்த்து வெல்வார் எவரும் இல்லை என்பது எனக்குத் தெரியும்; அவனுக்கு ஒன்றும் ஆகாது’ என்று உறுதியாகச் சொன்னான்.

“ஒருநாள் பழகினும் உயிர்விடும் பெரியோர் உளர்; பலநாள் பழகிய நீ, உடன் பிறப்பு என்ற உரிமையுடைய நீ சிறிதும் பதறாமல் அஞ்சாமல் நிற்கிறாயே! இங்கே நீ செயலற்று இருந்தால் நெருப்பில் விழுந்து, என் உயிரை யான் விடுவது உறுதி” என்றாள்.

அதற்குமேல் அவனால் அங்கு நிற்க முடியவில்லை; இருந்தாலும் இழிவு; நீங்கினாலும் இழவு என்ன செய்வது? என்று தெரியாமல் திகைத்தான்; “கழுகின் வேந்தன் காவல் இருக்கிறது” என்ற நம்பிக்கையில் குரல்வந்த திசை நோக்கி ஓடினான்.

இராவணன் வருகை

இலக்குவன் இடம் பெயர்தலை எதிர்நோக்கி இருந்த இராவணன், தவ வேடம் தாங்கிச் சாம வேதத்தை