பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரணிய காண்டம்

175



வீணையில் இசைத்துப் பாடினான்; முதிய வேடம் அவனுக்கு முகமூடியைத் தந்தது; அருந்ததி போன்ற கற்புடைய சீதை இருந்த பர்ணசாலையை அடைந்தான்.

“இந்தப் பர்ணசாலை உள் இருப்பது யார்?” என்று கேட்டான், பவளக்கொம்பு போன்ற சீதை, “உள்ளே வாருங்கள்” என்று வரவேற்றாள்; அவனும் அவள் தந்த இருக்கையில் அமர்ந்தான்.

“இந்த சாலை யாருடையது? இங்கு உறையும் அருந்தவன் யாவன்? நீவிர் யாவிர்?” என்று கேட்டான்.

“புதியவர்போல இருக்கிறது”” என்று அவனிடம் பரிவு காட்டிப் பேசினாள்.

“இராமனும் யானும் அவன் தம்பியோடு இங்குத் தங்கி இருக்கிறோம்; அன்னை சொற்கேட்டு இங்கு வந்திருக்கிறோம். அவர் பெயரினை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர் என்று நினைகிறேன்” என்றாள்.

“உம்முடைய பெற்றோர் யார்?” என்று கேட்டான்.

“சனகன் மகள்; என் பெயர் சானகி என்றாள்.

“முதியவரே நீர் எங்கிருந்து வருகிறீர்?”

“இராவணன் திருநகரில் இருந்து வந்திருக்கிறேன்; அவனுக்கு எந்தக் குறையும் இல்லை; எனினும், அவன் ஒரு மங்கையைத் தேடிக் கொண்டிருக்கிறான்” என்றான்.

“அரக்கர் நகரில் அருந்தவ முனிவராகிய நீர் எப்படித் தங்கி இருந்தீர்” என்று கேட்டாள்.