பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

கம்பராமாயணம்



அண்ணன் வலியை நன்கு அறிந்தவன்; “மேரு மலையை எதிர்க்கும் ஆற்றல் பெருங்காற்றுக்கு ஏது?” என்று ஐயப்பட்டான்; பாற்கடலைக் கடைந்த பராக்கிரமம் நிறைந்தவன் வாலி, அண்டத்தை அளாவும் வேகம் கொண்டவன்; அத்தகையவனை இராமன் எதிர்க்க முடியும் என்பதில் அவனுக்கு உறுதி ஏற்படவில்லை; அனுமனைத் தனியே அழைத்து, இராமன் ஆற்றலுக்கு எடுத்துக் காட்டுக் கேட்டான்.

அனுமன் அவன் ஐயத்தை அறிந்து, தெளிவு படுத்தினான்; “வாலியைக் கொல்லும் ஆற்றல் இராமனிடம் உண்டு” என்று கூறினான்; வேண்டு மனால் அவன் ஆற்றலை அறிய வாய்ப்பினைப் பெறலாம் என்றும் அறிவித்தான்; மராமரங்கள் ஏழையும் ஒரே அம்பால் துளைக்கும் வல்லமை அவனிடம் உண்டு என்பதைக் கூறித் தெளிவுபடுத்தினான்.

சுக்கிரீவனும் “அதுவே தக்கவழி என்று சிந்தித்த வனாய் மகிழ்ச்சி கொண்டான்; இராமனை அணுகித் தன் கருத்தை அடக்கமாய் அறிவித்தான்.

“உன்னுடைய வில்லின் ஆற்றலையும் அம்பின் வேகத்தையும் உன் விரத்தையும் எம் வானரர் காண விழைகின்றனர்; இந்த மராமரம் ஏழனுள் ஒன்றைத் துளைத்துக் காட்டினால் எங்களுக்கு ஊக்கமாக இருக்கும்” என்று தெரிவித்தான்.

இராமன் அவன் ஏக்கத்தை அறிந்து செயல்பட்டான்; “ஒரு மரம் என்ன ஏழு மரமும் என் ஒரே அம்பால் துளைபடும்” என்று கூறினான்.