பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிட்கிந்தா காண்டம்

199



மராமரங்கள் ஏழும் ஒன்றன்பின் ஒன்றாய் வரிசையாய் நின்று கொண்டிருந்தன. இராமன் வில்லை வளைத்து, நாண் ஏற்றி அம்பு தொடுத்தான் அவ் ஒலி ஏழ் உலகும் கேட்டது; அனைவரும் நடுங்கினர்; அவ் அம்பு ஏழு மராமரங்களையும் துளைத்து முடித்து அவனிடம் வந்து சேர்ந்தது; ‘ஏழு’ என்ற எண்ணிக்கை உடைய பொருள்களும் உயிர்களும் “அது தம்மையும் தாக்குமோ?” என்று அஞ்சின.

இராமன் வில்லாற்றலைக் கண்டு சுக்கிரீவன் சொல்லொணா மகிழ்வும் நம்பிக்கையும் கொண்டான்; அதற்குமேல் அவர்கள் சிறிதும் தூரம் நடந்து சென்றனர்; வழியில் துந்துபி என்ற அசுரனது எலும்புக் கூடு மலை போல் படிந்து கிடந்தது; அதனைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

வற்றி உலர்ந்த அந்த எலும்புக்கூடு வழிமறித்தது. இராமன் தன் தம்பியிடம் அதை அகற்றுமாறு குறிப்புக் காட்டினான். இலக்குவன் தன் கால் நகத்தால் அதை உதைத்துத் துக்கி எறிந்தான். அது சென்ற இடம் தெரியாமல் நெடுந்தொலைவில் விழுந்து மறைந்தது. இலக்குவன் ஆற்றலை அறிய, இது சுக்கிரீவனுக்கு ஒரு வாய்ப்பாய் அமைந்தது.

“இது என்ன?” என்று இராமன் கேட்டான்.

“துந்துபி என்பவன் போர்த்தினவு கொண்டு வாலியொடு மோதினான்; வெற்றி தோல்வி இன்றி இருவரும் கட்டிப் புரண்டனர். இறுதியில் வாலி அவனைக்குத்திக் கொன்று தரையில் வீழ்த்தினான். அவன்