பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

கம்பராமாயணம்



அமுதத்தைத் தந்த உனக்குத் தேவர், பாராட்டுரை வழங்க, எதிர்கொண்டு அழைத்து உபசரித்தார்களோ? “உன் தம்பிக்கு வாழ்வு தா” என்று இராமன் வாய் திறந்து கேட்டிருந்தால் வள்ளல் ஆகிய நீ, மறுத்துப் பேசி இருப்பாயா? போருக்குச் சென்றபோதே தடுத்தேனே, இராமன் சுக்கீரவனுக்குத் துணையாய் வந்திருக்கிறான் என்று சொன்னேனே, நீ கேட்கவில்லையே! சாவை விரும்பி ஏற்றுக் கொண்டாயே! “அம்பு ஒன்றால் உன் மார்பைப் பிளக்க முடியும்” என்று இதுவரை நான் நம்பிய தில்லை; இது புதுமையாய் இருக்கிறது” என்று புலம்பினாள்.

தன் மகனை விளித்து, “தம்பியும் தமையனும் உறவு கொண்டிருந்தபோது உயர்ந்திருந்தனர். பகை புகுந்தபோது எவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டுவிட்டது பார்த்தாயா? அறச் செல்வனாகிய இராமனும் அறம் திறம்ப முடியும் என்பதை நீ எண்ணிப் பார்த்ததுண்டா?” என்று கடுமையாய் விமரிசித்தாள்; அதற்குமேல் தொடரவிடாது. அனுமன் இடைநின்று தடுத்துச் தாரையை அந்தப் புரத்துக்கு அனுப்பி வைத்தான்; அங்கதனைக் கொண்டு ஈமக்கடன் செய்வித்தனர்; நடக்க வேண்டியதில் நாட்டம் கொண்டனர்.

முடிபுனை விழா

தம்பி இலக்குவனிடம் சுக்கிரீவனுக்கு அவன் கையால் முடி சூட்டும்படி கட்டளை இட்டான் இராமன்.

சுக்கிரீவனுக்கு முடி சூட்டப்பட்டது; இராமன் பின் வருமாறு அறிவுரை கூறினான்.