பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிட்கிந்தா காண்டம்

215



அழகிகள் சூழ்ந்துவர, இலக்குவன் வரும் வழியில் குறுக்கே எதிர்நோக்கிச் சென்றாள்; அவன் வழியை மறித்தாள்; இலக்குவன் தன்னைப் பெரிய சேனை ஒன்று எதிர்க்கும் என்று எண்ணினானே தவிர, பெண்கள் புடைசூழ வந்து தன்னை மறிப்பர் என்று எதிர்பார்க்கவில்லை.

தன்மனைவியைத் தவிர, வேறு எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்த்து அறியாதவன் அவன். சிரித்த முகமும், விரித்த கூந்தலும், இனித்த சொல்லும் கனிந்த பார்வையும் கொண்ட மகளிரைக் கண்டு இலக்குவன் நாணினான்.

அமைதியாய்த் தான் சொல்ல வந்த கருத்தை அடைக்கமாய்க் கூறினான்; “இராமன் சீதையைப் பிரிந்த துயரத்தில் ஆழ்ந்துகிடக்கிறான்; சுக்கிரீவன் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை; காலம் தாழ்த்திவிட்டான். அதற்குக் காரணம் அறிந்துவர இராமன் என்னை அனுப்பி இருக்கிறான்” என்று சொன்னான் இலக்குவன்.

“அவன் காலம் தாழ்த்தவில்லை; தக்க காலம் பார்த்துக்கொண்டு இருக்கிறான்; கடமையில் அவன், அதில் முழுக்கருத்தையும் செலுத்தி இருக்கிறான்; சீதை இருக்கும் இடம் தேட, இங்கு உள்ள வானரப்படைகள் போதா என்பதால் உலகின் எல்லாத் திக்குகளுக்கும் செய்தி அனுப்பி, வீரர்களைத் திரட்டிவர ஆள்களை அனுப்பி இருக்கிறான்; படைகள் வந்து குவியக் கால தாமதம் ஆகிறது. அதனால்தான் இன்னும் அவன் புறப் படவில்லை. சுக்கிரீவன் சொன்ன சொல் தவறமாட்டான்; செய்வதைத் திருந்தச் செய்யும் இயல்பினன்; இராமனுக்