பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

கம்பராமாயணம்



தங்கியிருந்த தவச் சாலையை மகளிர் சாலையாக்கினர்; காயும் கனியும் கொண்டு சென்று மருளும் மான்போல அவரை அணுகினர். புத்தம் புதிய மாதராய அவர்களை முதற்கண் நித்தம் தவம் புரியும் தவசியர் என்றே நினைத்தார். அழகும், இளமையும் அவரை ஈர்த்தன; அவர்கள் தந்த பழங்களைச் சுவை பார்த்தார். “தம்மோடு வருக” என்று அவர்கள் அழைத்தனர்; விழிகளால் அவருக்கு வழிகாட்டித் தம் பின்னால் வரச் செய்தனர்; வேல்விழி மாதரார் காட்டிய சாலை வழியே சென்று நாட்டு மண்ணை மிதித்தார் அம் மாமுனிவர்; காலடி பட்டதும் வறண்ட நிலங்கள் எல்லாம் வான் மழை நீரால் நிரம்பி ஆனந்தக் கண்ணிர் சொரிந்தன. வற்றி உலர்ந்திருந்த மரங்கள் எல்லாம் பசும் தழைகளைப் போர்த்தன. மயில்கள் எல்லாம் களிநடம் செய்தன. சாய்ந்து கிடந்த நெற்பயிர்கள் தழைத்துக் கதிர் மணிகளை விரித்து, முகம் காட்டின.

உரோமபாதர், “கலைக்கோட்டு மாமுனிவர் வருகையால்தான் மழை பெய்தது” என்பதை உணர்ந்தார்; ஒடோடி வந்து அவர் மலரடிகளில் விழுந்து வணங்கினர்; நங்கையர் சிலர் தவசிகள்போல வந்து மயக்கியமையை மன்னிக்கும்படி வேண்டினர்; ‘எல்லாம் நன்மைக்கே’ என்று அம் மாமுனிவர் நயம்படக்கூறி, அவர் அச்சத்தைப் போக்கினார். காவி உடை அணிந்து காயத்திரி தேவியைச் செபம் செய்து வந்து தவசி, சாவித்திரி ஒருத்தியைக் கைப் பிடிக்க அரசன் வழி வகுத்தான். தன் ஒரே மகள் சாந்தை என்பாளை அவருக்கு மணம் முடித்து உயர்பேறு பெற்றான். சுத்த பிரம்மம் ஆக இருந்த ஞானி மாயையின்