பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

கம்பராமாயணம்


சுந்தர காண்டம்

அனுமன் கடலைக் கடத்தல்

கடலைக் கடப்பதற்கு அனுமன் தன் உடம்பைப் பெருக்க வேண்டுவதாயிற்று. மண்ணும் விண்ணும் நிறைந்த பேருருவம் எடுத்தான். அவன் தலை விண்ணை முட்டியது; அங்கே மண்ணவர் வியக்கும் துறக்க நாடு இருந்தது; சீதை அங்கு வாழ விரும்புபவள் அல்லள்; அதனால், அங்கு இருக்க அவளுக்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தான்.

அவன் ஏறி நின்றது மகேந்திர மலை; விண்ணை முட்டும் அம் மலையில் இருந்த அவனுக்குப் பொன்னை நிகர்த்த இலங்கை கண்ணில் பட்டது. “செல்லும் இடம் அதுதான் என்ற தெளிவு ஏற்பட்டது. அதனால், எல்லை யில்லா மகிழ்ச்சி அவனைத் தழுவியது.

அங்கிருந்து அ வன் இலங்கை நோக்கிப் பாய்ந்தான்; கால்களை அழுத்தமாக அம் மலையில் ஊன்றினான்; வானரனாக இருந்தவன் வானவர்போல் அந்தரத்தில் பறந்தான், பறவை போலத் தன்னை மாற்றிக் கொண்டான்; வாலை உயர்த்தினான்; கால்களை மடக்கினான்; கழுத்தை உள் அடக்கினான்; காற்றிலும் வேகமாகத் தன் ஆற்றல் தோன்ற விண்ணில் பறந்தான். அவன் செல்லும் வேகத்தால் கல்லும் முள்ளும் மரமும் செடியும், கொடியும் அவனுடன் தோழமை கொண்டன; உடன் பயணம் செய்தன.