பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர காண்டம்

241



அவனை விரட்ட அவன் கண்ஒன்றனைக் குருடு ஆக்கியது; அச் சோகச் செய்கை அவள்கண் முன்நின்றது.

கரம்பற்றி வானிடை எடுத்துச் சென்ற கிராதகனை வாள்கொண்டு வெட்டிய வீரச் செய்கையை எண்ணிப் பார்த்தாள்.

பெருமைமிக்க இராமன் செயல்கள் அவளுக்கு ஊக்கம் தந்தன. இடர்சிறிதும் நேராமல் காத்த வீரன், தன்னை மீட்கவராதது அவளுக்கு வியப்பாய் இருந்தது; அதற்குக் காரணம் யாதாய் இருக்கும்?

“இலக்குவன் கிழித்த கோட்டை அழித்து விட்டேன்; அதற்காக என்னைத் தன் மனத்தில் அழித்து விட்டானா?”

“கொண்டு சென்ற அரக்கன் உண்டு முடித்திருப்பான் என்று அயர்ந்து ஒய்ந்து விட்டானா?”

“பாதுகையை ஏந்திச் சென்ற பரதன், விரதத்தைக் காக்க முடியாமல் வரதனிடம், வந்து திரும்ப அழைத்துச் சென்றுவிட்டானா?”

“இரக்கமற்ற இராவணன் இலங்கை நகரில் என்னைச் சிறை வைத்திருப்பான் என்பதை அறியாமல் திகைத்திருப்பானா?”

இத்தகைய வினாக்கள் வினாடிக்கு வினாடி மாறி மாறி அவள் மனத்தில் எழுந்தன.

“அழுத கண்ணோடு அவனையே நினைந்து காத்துக் கொண்டு இருக்கிறாள்” என்ற செய்தியை யார் அவனுக்குச் சொல்லப் போகிறார்கள் என்ற ஏக்கம் அவளை வாட்டியது.