பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

கம்பராமாயணம்



அறிவுறுத்தினாள்; அடிமைகள் அவர்கள்; அதனால். அடங்கி நின்றனர்; அரசனின் ஆணைக்கு அஞ்சிப் புறக்காவல் மட்டும் மேற்கொண்டு ஒதுங்கினர்.

அனுமன் அறிமுகம்

சீதைக்கு வாழ்க்கை கசந்துவிட்டது; துன்பத்துக் கும் ஒர் எல்லை உண்டு; உயிர் அவளுக்குச் சுமையாய் விளங்கியது; உயிருக்கும் உணர்வுக்கும் மதிப்புத் தாராமல் தன் உடலை இராவணன் விரும்புவதை அவள் வெறுத்தாள்; அழகு தனக்கு எதிராகப் போரிடுவதை அறிந்தாள்; “மானம் இழந்த பின் வாழாமை இனியது” என்ற முடிவுக்கு வந்தாள்.

உயிர் விடுதற்குத் துணிந்தாள்; அருகில் இருந்த குருக்கத்திச் செடி அவளுக்கு உதவியாய் நின்றது. அதனைச் சுருக்குக் கயிறாய் மாற்ற நினைத்தாள்; வாழ்க்கையின் கரை ஓரத்தைக் கண்டாள். மயிர் இழையில் அவள் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது; தடுத்து நிறுத்த வேண்டும்; என்ன செய்வது? அவள் நோய்க்கு மருந்து யாது?

அனுமன் நடந்த இந் நிகழ்ச்சிகளை நாடகம்போல் கவனித்து வந்தான். சோகத்தின் எல்லையில் இருப்பவளை வேகமாகக் காத்தல் வேண்டும்; அதற்கு மருந்து? ‘இராமன்’ என்ற திருப்பெயர்தான்; ‘இராமன் வாழ்க’ என்று குரல் கொடுத்தான்.

அப்பெயர் அவளுக்கு உயிரைத் தந்தது; புத்தொளியைக் கண்டாள்; அவள் பார்வை, ஒலி வந்த திக்கை நோக்கிற்று.