பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

கம்பராமாயணம்



“என்னைக் கரம் பிடித்து மணந்த நாளில் “இந்த இப்பிறவியில் இருமாதரைச் சிந்தையாலும் தொடேன்” என்று எனக்குத் தந்த வரத்தை எடுத்துச் சொல்க” என்று கூறி, இராமன் ஓர் இலட்சிய புருஷன் என்பதை வற்புறுத்தி அறிவுறுத்தினாள்.

“அரசு இருந்து ஆளவும், வீரசு கோலங்கள் பூண்டு அவனோடு உடன் வீற்றிருக்கவும் யான் கொடுத்து வைக்கவில்லை; விதி என்னைச் சதி செய்து விட்டது” என்று கழிவிரக்கமாய் உருகி உரைத்தாள்.

துதுவன் என்ற எல்லையை மீறித் தான் ஒதிய கருத்தை நினைத்து அனுமன் வருந்தினான்; பெண்மை பேசும் நல்லுரைகள் அவன் நெஞ்சைக் குளிர்வித்தன.

“இராமனிடம் சொல்ல நினைக்கும் செய்திகள் உளவோ?” என்று அடக்கமாய்க் கேட்டான்.

“தாரம் அல்லள் என்று சொல்லி என்னை ஒரம் கட்டலாம்; அதற்காகத் தன் வீரம் காட்டாமல் இருப்பது அவன் ஆண்மைக்கு இழுக்கு” என்பதை நினைவுறுத்துக” என்றாள்.

“வாழ்வதா வீழ்வதா? என்பதுதான் என் வாழ்க்கைப் பிரச்சினை” என்றாள்.

“நம்பிக்கை என்னை வாழ வைக்கலாம்; அதற்கும் ஒர் வரையறை உண்டு; திங்கள் ஒன்று இங்கு இருப்பேன்; அது தீர்ந்தால் என் உயிரை மாய்ப்பேன்” என்று உறுதியாய்க் கூறினாள்.