பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யுத்த காண்டம்

267



பிழை இது; மனிதனை மறந்து விட்டாய்; மானுடத்தின் வெற்றியை நிலைநாட்டப் பிறந்தவன் அவன்” என்றான்.

வீடணன் கூறியது, வீண்உரை என்று கருதினான் இராவணன். அரக்கர் குலத்தில் பிறந்த அவன், பெண்ணுக்காக இரக்கம் காட்டுவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “இனப்பற்று இல்லாத துரோகி நீ; தப்பிப் பிறந்து விட்டாய்; இனி நீ தப்பிச் சென்றால்தான் பிழைப்பாய்; பிரகலாதர் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர். நீ விதி விலக்கில்லை” என்றான்.

வீடணன் திருத்த முயன்றான்; திருத்துதல் தீராதாயின் பொறுத்துற வேண்டும்; இவன் கும்ப கருணன் அல்லன்; கடமை என்பது எது? என்று முடிவு செய்வதில் வேறுபாடு இருந்தது; “உடன் பிறந்தவனுக் காக உயிர் விடுவது கடமை” என்று கருதினான் கும்பகருணன், உடன் பிறந்த கொள்கைக்காக எதையும் இழப்பது என்பது வீடணன் கொள்கையாய் இருந்தது; முன்னவன் கடமை வீரன்; இவனோ அறச் செல்வன்; “தனிமனிதனுக்காகத் தன்னை இழப்பதை விட உலகப் பொது அறத்திற்காகத் தான் பணி செய்வதே செய்யத் தக்கது” என்ற கொள்கை இவனிடம் நிலவியது.

அறம் என்பது ஒன்று; அதோடு அவன் ஞானநெறியில் நம்பிக்கை உள்ளவன்; பிறப்பு என்பது பந்த பாசங்களைக் கொண்டது; இறப்பு என்பது முடிந்த முடிவு அன்று; பிறப்பு இறப்பற்ற பேரின்ப வாழ்வு. அடைதலே பிறப்பின் அடிப்படை’ என்று கருதினான்; சமயக் கோட்பாடுகள் இவனைப் பண்படுத்தி இருந்தன.