பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

கம்பராமாயணம்



கொல்லும் வியாதி’ என்பது பழமொழி; அவனை அழிப்பதற்கு இவன் தேவைப்படுவான்; இவனை நாம் சேர்த்துக் கொள்வது அரசியல்”.

அரசியலில் கட்சி மாறுவது இயற்கை; அதற்கு உரிமை உண்டு; அதற்குத் தக்க தடுப்புச் சட்டம் எதுவும் உருவாக வில்லை; இவன் சமையலுக்கு வேண்டிய கரிவேப்பிலைதான்; தேவை இல்லை என்றால் நம்மால் இவனைத் துக்கி எறிய முடியும்; அரக்கர் சேனையை அஞ்சாத நாம், இந்தக் கடுவ்ன் பூனையைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும். வெள்ளத்தில் இவன் ஒரு நீர்க்குமிழி; அதுதானே கரைந்து விடும்; வெடித்துவிடும். நம் ஆற்றலில் நமக்கு நம்பிக்கை உண்டு” என்று அனுமன் கூறினான்.

பகைவன் என்பதால் சுக்கிரீவன் அஞ்சினான்; சாம்பவான் சாதியைப் பற்றிப் பேசினான்; நீலன் ஒட்டைப் படகு என்றான்; அனுமன் ஒரு கரிவேப்பிலை என்றான்; எரிந்த கட்சி எரியாத கட்சியாய் வாதம் இட்டனர்.

பட்டிமன்றப் பேச்சு கேட்டு நடுநிலை வகித்துக் கருத்தைக் கூறும் தலைவர்களைப் போல, மாருதி சொன்ன கருத்தை, இராமன் ஏற்றுக் கொண்டான்; ஆனால், சிறிது வேறுபட்டுப் பேசி இரு கட்சியினரும் பேசியது சரியே” என்று ஒப்புக் கொண்டு மேலும் புதியது பேசினான்.

“நன்மையோ, தீமையோ அதைப் பற்றி நாம் சிந்திக்கத் தேவை இல்லை; அடைக்கலம் என்று வந்தவனுக்கு ஆதரவு தருவது அரிய பண்பாடு; அதை நாம் ஏற்க வேண்டும்”.