பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யுத்த காண்டம்

281



அந்த நெருப்பில் உள்ள கரித்துண்டை எடுத்து வெளியே போடும் குழந்தையைப் போல் இராவணன் முடியில் பிடிபட்ட வைரக் கற்களைப் பறித்துக் கொண்டு இராமனிடம் வேகமாக வந்து சேர்ந்தான்; தலைதப்பியது; இராவணன் முடி தப்பவில்லை; மற்றவர் முடிகள் தாம் அவன் அடிகளில் பட்டுப் பழக்கம்; இதுவரை தன் மணிமுடியில் மாற்றான் கைபட்டது இல்லை; இதை அவமானமாகக் கருதினான் இராவணன்.

அனுமன் அசோக வனத்தை அழித்தான்; அவன் தலைவன், அவன் மணிமுடியைப் பறித்தான்; இச் செய்கை இராவணனுக்கு எரிச்சல் ஊட்டியது.

அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்பதை முடிவு செய்ய, அமைச்சர் அவையை இராவணன் கூட்டினான்; போர் முயற்சிகளை மேற்கொண்டான்; போர்முரசு கொட்டச் செய்தான். வெற்றிதரும் சங்குகளை முழக்கினான்; அமைதி இலங்கையிடம் விடுமுறை பெற்று, ஒய்வு எடுத்துக் கொண்டது.

இராவணன் போருக்குப் பின்வாங்கவில்லை; இருதரத்தவரும் கைகலக்கக் காத்திருந்தனர்; எனினும், முடிந்தால் கைகுலுக்க இராமன் முயற்சி எடுத்துக் கொண்டான். இது தனிப்பட்ட ஒருவனோடு தொடுக்கும் போர் அன்று; ஒர் அரசன் மற்றொரு அரசன்மேல் எடுக்கும் படை எடுப்பு, “தூதுவன் ஒருவனை அனுப்பிச் சீதையை விடுவது பற்றிப் பேசி வெற்றி காண வேண்டும்” என்று விழைந்தான்.