பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யுத்த காண்டம்

297



“அன்பு மகளே! அவன் ஆசைக்கு இணங்கு; பிணங்கினால் நம் குலத்தையும் நம்மையும் அழித்து விடுவான்; நீ மனம் வைத்தால், நான் உயர் பதவிகள் பெறுவேன்; நீயும் அவனுக்குத் தேவியாவாய்; இருவர் ஆவியும் நிற்கும்; நீ சிறையிடைத் தேம்பி என்ன பயன்?” என்று அறிவுரை கூறினான்.

“மானத்தை விட்டு என்தந்தை உயிர் வாழான் ஈனச் செயலுக்கு அவன் ஒருகாலும் சம்மதியான்; முறை கெட்டு வாழும்படி உரை செய்யமாட்டான்” என்றாள் சீதை.

வாள்உருவி சனகனாய் வந்தவனைக் கொல்லக் கையோங்கினான்.

நகைத்தாள் சீதை, “நாடகம் நன்று” என்று நவின்றாள்.

“நீ என்னையும் கொல்ல மாட்டாய்; இவனையும் கொல்லப்போவது இல்லை; யாரையும் கொல்லப் போவ தில்லை; அது மட்டுமன்று; போரில் நீ வெல்லப்போவதும் இல்லை.”

“உனக்கு அழிவு நெருங்கிவிட்டது; இராமன் அம்பு நீ வரும் வழியைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது; புகழ் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது” என்றாள்.

மகோதரன் இடைநின்று, இராவணனைத் தடுத்தான்.

“அவசரப்பட்டு இவனைக் கொல்லாதே; நாளை நீ வெற்றிபெற்றால், சீதை உம்வசமாவாள்; அப்பொழுது தன் தந்தை எங்கே என்று அவள் கேட்பாள், அங்கை விரிக்க வேண்டி வரும்” என்று கூறினான்.