பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

கம்பராமாயணம்



என்று ஏங்கினாள்; அவன் உயிரைத் தேடித் தன் உயிரை அனுப்பினாள்; அது திரும்பவே இல்லை.

முடிவுரை

நிகழ்ச்சிகள் வேகமாய்த் தொடர்ந்தன; வீடணன் இலங்கைக்கு ஆட்சிக்கு உரியன் ஆனான்; இலக்குவனைக் கொண்டு இராமன் அவனுக்குப் பட்டம் சூட்டினான்; அனுமன் அசோகாவனத்துக்குச் சென்று, சீதைக்குச் செய்தி சொல்லி, அவள் சோகத்தை மாற்றினான்.

அழைத்துவரப்பட்ட சீதை வரவேற்பில் ஒருதடை ஏற்பட்டது; இராமன் சராசரி மனிதனாய் நடந்து கொண்டான்; சீதையை ஏற்க மறுத்தான்; “பகைவன் பிடியில் இருந்த அவளை மாசுபடிந்தவள் என்று உலகம் நினைக்க வாய்ப்புண்டு” எனக் கருதி அவளை ஏற்கத் தயங்கினான்; “இவளா என் மனைவி?” என்ற நாடகத்தை நடித்துக் காட்டினான்.

இலக்குவன் பதறிப்போனான்; வானவர் அழுது விட்டனர்; பேய்களும் சீதைக்காகக் கண்ணிர் விட்டன.

இராமன், ‘அவள் விரும்பினால் தீக்குளிக்கலாம்’ என்று கூறினான்; அவளை இராவணனே தீண்ட முடியவில்லை; தீமட்டும் எப்படி அவளைத் தீண்டும்? தேர்வில் வெற்றி கண்டாள்; அவள் தூய்மை நிறுவப் பட்டது. “அவள் கற்பில் மாசு ஏற்படவில்லை” என்பதை உலகம் அறியச் செய்தான். இராமன் அதற்கே இந்நாடகத்தை நடத்தினான்.