பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலகாண்டம்

41



அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, இவ் வாலிபர்கள் தசரதன் நன்மக்கள் என்பதை எடுத்து உரைத்தார். இவர்கள் காவல் இருக்கத் தாம் கண்ணிய வேள்விகளைப் பண்ணி முடிக்கலாம் என்று உரைத்தார்.

வேள்வி தொடங்கியது; கேள்வி மிக்க முனிவர் அங்கு வந்து கூடினர்; “இனி அரக்கர் வந்து அழிவு செய்ய முடியாது” என்பதால் அச்சமும் அவலமும் நீங்கி, உவகை பெற்றுச் செயல்பட்டனர். தீயை வளர்த்து, உலகத்துத் தீமைகளை அழிக்க முயன்றனர். விசுவாமித்தரர் யோக நிலையில் அமர்ந்து, தம் வேகம் எல்லாம் ஒடுக்கி, மவுன விரதம் மேற்கொண்டார். ஆறு நாள்கள் இந்த வேள்வி தொடர்ந்தது; வேறு அரக்கர் வந்து தொடர்ந்து வேள்விக் குழிகளைக் குருதிச் சேறு ஆக்காமல் இவ்விருவரும் ஊண் உறக்கம் இன்றி, வில் ஏந்திய கையராய்க் காவல் காத்து நின்றனர்.

அரக்கருடன் போர்

தாடகை பட்டதும் அந்த அதிர்ச்சிமிக்க செய்தி அரக்கர்களைச் சுட்டது; அது காடு முழுவதும் எட்டி எதிர் ஒலித்தது. அவள் மாரீசன் சுபாகு என்பவனின் தாய்; அரக்கர்களின் தலைவி, அக்கிரமங்களின் உறைவிடம்; “அவள் வீழ்ந்தாள்” என்றதும் அரக்கர்கள் துயரில் ஆழ்ந்தனர்; கொதித்தனர்; திக்கெட்டும் முரசுகள் அதிர்த்தனர்; வான் எங்கும் குழுமினர்; அவர்கள் கொக்கரித்து இடி முழக்கம் இட்டனர். வானத்தில் கரிய மேகங்கள் சூழ்ந்திருப்பது போல் இவ்வரக்கர்கள் ஒருங்கு திரண்டனர்; “தலைவியை வீழ்த்திய அந்தத் தறுகணாளர்களை