பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலகாண்டம்

43



முடித்துக் கொண்டான். “அரக்கர் தலைவர் இருவரும் களம் விட்டு மறையவே, மற்றவர் எதிர்த்துப் பயனில்லை” என்பதால் உயிர்மேல் விருப்புக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஒட்டம் பிடித்தனர். செத்தவர் சிலர்; சிதைந்தவர் பலர் ஆயினர்.

அரக்கர்களின் கூட்டு எதிர்ப்பு வரட்டுக் கூச்சலாய் எழுந்து, ஓங்கி, அடங்கிவிட்டது. விசுவாமித்திரர் தம் யாக வேள்வியை இனிது முடித்து மன நிறைவு கண்டார். மற்றைய முனிவர்களும் பனிப்படலம் நீங்கியது போல மன ஆறுதல் பெற்றுத் தத்தம் வேள்விப் பணிகளைச் செய்து முடித்தனர். அரக்கர்களின் அரட்டலும் மருட்டலும் அதோடு முடிந்தன. இராமன் விசுவாமித்திரருக்குத் துணையாய் இருந்து அவர் இட்ட பணிகளை இனிது முடித்துத் தந்து, அவர்தம் நன்மதிப்பைப் பெற்றான்.

மிதிலை ஏகல்

கடமையை முடித்துக் கவலை நீங்கி இருந்தனர். ‘அடுத்துச் செய்யத்தக்கது யாது?’ என்று முனிவன் கட்டளையை எதிர்நோக்கி நின்றனர்.

“அடுத்த பயணம் எங்கே”என்று இராமன் நயனம் வினவியது.

“சனகன் என்ற பெயருடைய மாமன்னன் ஒரு பெரு வேள்வி நடத்த இருக்கிறான்; வேள்வி காண அவன் ஊராகிய மிதிலைக்குச் செல்கிறோம். அங்கு உனக்கு ஒரு வீர விளையாட்டுக் காத்துக் கிடக்கிறது”.