பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

கம்பராமாயணம்



“மேரு போன்ற வில் ஒன்று வளைப்பார் அற்று வாளாக் கிடக்கிறது; அதனை எடுத்து, வளைத்து, நாண் ஏற்றி, உன் வீரத்தைக் காட்டு; நீ மாவீரன் என்பதற்கு அஃது ஒர் எடுத்துக்காட்டு; அதனை வெளிப்படுத்த இவ்வாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன” என்று கூறினார்.

எடுத்த கருமம் முடித்துக் கொடுத்தமையின் அவனைச் “சான்றோன்” என்று உலகம் புகழ்ந்தது. முனிவர்கள் அவன் ஆற்றிய பணியையும், அதனால், தாம் அடைந்த பயனையும் சொல்லிப் பாராட்டி நன்றி நவின்றனர். “இவனை மாவீரன் என்று கேட்கும் தசரதன் உவகை உறுவது உறுதி” என்றனர்.

அங்கே அந்த வனத்தில் வாழும் முனிவர் வாயிலாய் அவன் முன்னோர்களின் வரலாறுகளைக் கேட்டு மகிழ்வும் பெருமையும் கொண்டனர். முந்தையோர் வீரச் செயல்களைக் கேட்கும் தோறும் அவர்கள் நெஞ்சம் இறும்பூது எய்தியது. தேன் மழையில் தாம் நனைவது போல அக்கதைகள் அவர்களுக்கு இனித்தன. தாய் பாடும் தாலாட்டுப் போல அவர்கள் நெஞ்சில் பதிந்தன; அவர்களுக்கு ஊக்கம் அளித்தன.

பகீரதன் கதை

விசுவாமித்திரர்பால் கேட்ட கதைகளுள் பகீரதன் கதையும் ஒன்றாகும்.

“கங்கை நதிக்குப் பாகீரதி என்ற பெயர் வரக் காரணம் யாது” என்று முனிவரைக் கேட்டு அறிந்தனர்.

பகீரதனின் முயற்சியால் வான் உலகில் பாய்ந்து கிடந்த நதியை மண்ணுக்குக் கொண்டு வந்தமையால்