பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

கம்பராமாயணம்



பஞ்சினைப்போல் பற்றிக் கொண்டது. இந்திரனுக்கு ‘போகி’ என்ற பெயரும் உண்டு. அழகியர் பலர் இருந்தும் அவன் நெஞ்சு, இவள்பால் இளகிவிட்டது. உயர்ந்த பதவியில் இருப்பவன் உடனே தாழ்ந்து போக முடியாது; வலியப் பற்றி அவளை வம்புக்கு இழுத்து இருக்கலாம்; அகலிகை கவுதமர் மனைவி; அவர் பார்வையில் பட்டால் எரிந்து சாம்பல் ஆக வேண்டுவதுதான்; முனிவருக்குத் தெரியாமல் தனிமையில் அவளை எப்படிச் சந்திப்பது? சாத்திரத்தில் சம்பிரதாயத்தில் உருண்டு புரண்டு எழுந்தவள். அவன் பேரழகனாய் இருக்கலாம்; செல்வச் சிறப்பில் அவன் மிதக்கலாம். மன்மதனே வந்து மயக்கினாலும் அவள் ‘சம்மதம்’ என்று சொல்ல மாட்டாள். கட்டுப்பாட்டில் வாழும் அவள், தன் நெறியில் தட்டுப்பாடு காட்டமாட்டாள். என் செய்வது? அவளை ஏமாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. மலரினும் மெல்லிய காதல் இன்பத்தை அவன் வலியப் பெற விழைந்தான். இதனைப் பெருந்திணை என்று பெரியோர் பேசுவர்.

“இருட்டிலே அவளை மருட்டி உறவு கொள்வது” என்று உறுதி கொண்டான். கவுதமர் எப்பொழுது வீட்டை விட்டு வெளியேறுவார்? பொழுது புலர்ந்தால்தான் கங்கைக்கு நீராடச் செல்வார்; அதற்கு முன் உள்ளே சென்றால் அவன் கள்ளத்தன்மை வெளிப்பட்டு விடும்.

பின்னிரவுப் பொழுதில் கோழி கூவுவதைப் போல இவன் குரல் கொடுத்தான். “பொழுது விடிந்து விட்டது” என்று அவர் இறைவனைத் தொழுது வழிபட உறக்கத்தினின்று எழுந்தார். தூங்குபவளைத் தட்டி எழுப்பாமல் உறங்கட்டும் என்று அவளை விட்டுவிட்டு