பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

கம்பராமாயணம்



பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. “நீ பெண் ஆகுக” என்று சபித்தார். “மற்றவர் கண்களுக்கு நீ உன் சொந்த உருவில் காட்சி அளிப்பாய்; உனக்கு மட்டும் நீ பெண்ணாகத்தான் தோன்றுவாய்” என்று சாபம் இட்டார். இருட்டிலே நடந்தது வெளிச்சத்துக்கு வரவே இல்லை. உலகத்துக்கு அவள் ஒரு பாடமாக விளங்கினாள்.

கல்லாகி விட்டவளுக்குப் பாவ விமோசனமே கிடையாதா? ஆண்கள் தவறு செய்தால் மன்னிக்கப் படுகின்றனர். பெண்கள் மட்டும் ஏன் ஒறுக்கப்பட வேண்டும். நெஞ்சு உரம் கொண்டவள்தான்; என்றாலும், அவள் அவனோடு மஞ்சத்தில் மெழுகுவர்த்தியாகி விட்டாள். அவள் காலம் காலமாகக் கல்லாகிக் கிடந்தாள். அந்தக் கல் இராமன் வழியில் தட்டுப்பட்டது. இராமன் திருவடி பட்டதும் அவள் உயிர் பெற்று எழுந்தாள். கல்லையும் காரிகையாக்கும் கலை, அவன் காலுக்கு இருந்தது. அவள் சாப விமோசனம் பெற்றாள்.

ஆத்திரத்தில் முனிவர் மிகைப்பட நடந்து கொண்டார். அவரே அவளை மன்னித்து இருக்கலாம்; அத்தகைய மனநிலை அவருக்கு அப்பொழுது அமைய வில்லை. இராமனைக் கண்டதும் அவர் மனம் மாறியது; விசுவாமித்திரர் வேறு அறிவுரை கூறினார். “பொறுப்பது கடன்” என்று எடுத்துக் கூறினார்; அவளை மறுபடியும் சேர்த்துக் கொள்ள வேண்டினார். கவுதமர் மறுபடியும் தம் தவ வாழ்க்கையில் ஈடுபடலாயினார். அகலிகையும் முனிபத்தினியாய் இருந்து அவருக்குப் பணிவிடை செய்தாள்; அவள் கூந்தல் மலர் மணம் பெற்றது; கல்லைப் பெண்ணாக்கிய காகுத்தன் பெருமையைப் பாராட்டினார்