பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலகாண்டம்

57



வராய் அவ்வேல் விழியாளை மறந்தனர். இம்முயற்சியைத் துறந்தனர். சீதையைத் தொடுதவதற்கு முன் இந்த வில்லின் நாணைத் தொட நேர்ந்தது. அதனால், பல்லை இழந் தவர் பலர். அந்த முல்லைக் கொடி யாளை அடைய முடியாமல் துயருற்றுத் திரும்பியவர் பலர்; சீதையின் கன்னிமைக்கு அந்த வில்லின் வல்லமை காப்பாக இருந்தது.

வில் முறிவு

சிவதனுசு சீதையைப் போலவே தக்க வீரனின் கை படாமல் காத்துக் கிடந்தது. வில்லை முறிக்கும் விழாவைக் காண நாட்டவர் வந்து குழுமினர். “புதியவன் ஒருவன் வருகை தந்திருக்கிறான்” என்ற செய்தி எங்கும் பரவியது. “இந்த முற்றிய வில்லால் கன்னியும் முதிர்ந்து போக வேண்டிய நிலை ஏற்படுமோ?” என்று பலரும் அஞ்சினர்.

‘இந்த வில்லை முறிப்பவர் முல்லைக் கொடியாளை மணக்கலாம்’ என்று முன்னுரை கூறினான் சனகன். வாய்ப்புக்காகக் காத்திருந்த வாலிபன் முனிவரைப் பார்த்தான்; அவர் இவனைப் பார்த்தார்; விழியால் குறிப்புக் காட்டி ‘அதை முறிக்க’ என அறிவிப்புச் செய்தார். அவன் வில்லை எடுக்கச் செல்பவனைப் போல அதை நோக்கி நடந்தான். “இந்த வில்லை இவன் எடுப்பானா; எடுத்தால் இதை முறிப்பானா?” என்று எதிர்பார்த்திருந்த, அவையோர் வைத்த விழி வாங்காமல் அவனையே பார்த்து இருந்தனர். “இவன் எப்படி எடுப்பான்?” எடுத்தால் வில் முறியுமா அவன் இடுப்பு முறியுமா” என்று பார்க்கக் காத்துக் கிடந்தனர். அவன் சென்ற வேகம், எடுத்த விரைவு, அதை முறித்த ஒசை எல்லாம் கண்மூடிக் கண்