பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலகாண்டம்

61



செல்வமாகப் படவில்லை; அவளை மருமகளாக அடைந்ததையே அருந்தவம் என்று கருதினான்; “இதுவே திரு” என்று எண்ணினான். “திரு என்பதற்கு உரு” இது என்பதை அறிந்தான்.

அவைக் கண் வந்திருந்த நவையில் தவசிகளைச் சீதை முதற்கண் வணங்கினாள்; இராமனைப் பெற்ற பெரியோன் என்பதால் தசரதன் திருவடிகளைத் தொட்டு ஆசி பெற்றாள்; பின் தன் தந்தை சனகன் அருகில் வந்து, அவள் பக்கத்தில் இருந்தாள்; அங்குக் குழுமியிருந்த விழுமியோர் ஆகிய நகர மாந்தரும் நன்கலமாதரும் அவளைத் தெய்வம் என மதித்துப் போற்றினார்.

முனிவர் பாராட்டுரை

ஆசானாய் வந்த விசுவாமித்திரர், பொன்னொளிர் மகளைக் கண்டதும் பொலிவுபெற்ற மனத்தினர் ஆயினர். மேனகையைக் கண்டு அவள் அழகிற்குக் குழைந்து அவர் தம் தவத்தையே பரிசாகத் தந்தவர். மேனகையைக் கண்டது காதற்பார்வை; அழகு ரசனை அவரை விட வில்லை. “நச்சுடை வடிக்கண் மலர் நங்கை இவள் என்றால், இச் சிலை கிடக்கட்டும்; ஏழுமலையாயினும் இவளுக்காக இருக்கலாம்” என்று பாராட்டினார். “காதற் பெண் கடைப் பார்வையில் விண்ணையும் சாடலாம்” என்ற பாரதியின் வாசகம் இந்த மாமுனிவர் பேச்சில் வெளிப்பட்டது.

நாள் தள்ளிப்போட அவர்களால் முடியவில்லை. ‘அடுத்த நாளே மணநாள் என்று முடிவு செய்யப்பட்டது. இடையிட்ட அந்த ஒர் இரவும் காதலர் இருவர்களுக்கும்