பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலகாண்டம்

63



பட்டது; மணமிக்க மலர்கள் எங்கும் மணந்தன; புலவர்கள் பாக்கள் வாழ்த்துச் செய்திகளை யாத்து அளித்தன.

வேள்வித் தீயின்முன் செய்ய வேண்டிய சடங்குகளைச் செம்மையாய்ச் செய்தனர்; மணத் தவிசில் இருந்து பின் எழுந்து அம்மேடையை வலம் வந்தனர்; அவள் அவனோடு ஒட்டிக் கொண்டு உறவாடிப் பின் தொடர்ந்தாள். அவள் மெல்லிய கரங்களைப் பற்றிக் கொண்டு அம் மேடையைச் சுற்றி வந்தான் இராமன்; அம்மி மிதித்து அருந்ததியை அவளுக்குக் காட்ட, அவள் வணங்கினாள்; வேதங்கள் ஒலித்தன; கீதங்கள் வாழ்த்தொலி பெருக்கின; பேதங்கள் நீங்கி இருவர் மனமும் ஒன்று பட்டன.

வாழ்த்துப் பெற்றனர்

மணம் முடித்துக் கொண்ட அவர்கள், பெரியோர்களை வணங்கி வாழ்த்துரைகள் பெற்றனர்; முதற்கண் கேகயன் மக. கைகேயியை வணங்கினர்; பெற்ற தாயைவிடப் பாசம்மிக்க தாய் அவள் ஆதலின், அவளுக்கு முதன்மை தந்தான் இராமன்; அடுத்துப் பெற்ற தாய் கோசலையையும், தான் மதித்துப் போற்றிய சிற்றன்னையாகிய சுமத்திரையை யும் வணங்கினான். மாமியர் மூவரும் மருமகளை மனமார வாழ்த்தினர். அவள் பேரழகும் பெரு வனப்பும் அவர்களைப் பெரிதும் கவர்ந்தன. அவள் மாமியர் மெச்சும் மருமகள் ஆயினள், “வீட்டுக்கு வந்த திருமகள்” எனப் பாராட்டிப் பேசினார். “இராமன் கண்டெடுத்த அரிய அணிகலன் அவள்” என ஆராதித்தனர்.