பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

கம்பராமாயணம்



யாய்க் கிடக்கிறது. தவம் செய்க; வாழ்நாளை அவம் ஆக்காதே; இளமைக்கு அழகு இன்புற்று இருத்தல்; முதுமைக்கு ஆக்கம் அறிவு மிக்க நோக்கம்; இங்கே இருந்தால் ஏற்படும் தேக்கம்; அமையட்டும் தவத்தில் ஊக்கம்” என்று அறிவுறுத்தியது.

“காடு வா வா என்கிறது; வீடு போபோ என்கிறது” என்னும் நிலையைத் தசரதன் அடைந்தான். அறிவுடை அமைச்சர் இருந்தனர்; செறிவு மிக்க வேள்வியர் இருந்தனர்; அவர்கள் எடுத்து உரைக்காத அறிவுரையை ஒரு மயிர்முடி தோற்றுவித்தது. அது வரலாற்றுத் திருப் பத்துக்குத் துணை செய்தது; “மாட்சிமிக்க இராவணன் வீழ்ச்சி அடைதற்கு உரிய காலம் வந்துவிட்டது” என்று அறிவிக்கும் முன்னறிவிப்புக் காட்சியாக இது விளங்கியது. அவன் ஆற்றிய தீவினைகள் இந் நரை முடி வடிவத்தில் வெளுத்து வந்து, அவனைக் கொல்லுமாறு செயல்பட்டது.

தசரதன் மனமாற்றம்

தசரதன் அமைச்சர் அவையைக் கூட்டினான்; வசிட்டரை அழைப்பித்தான்; ஆன்று அவிந்து அடங்கிய சான்றோரை அழைத்தான்; அரசியல் சட்டம் அறிந்தவர் அமைச்சர், சாத்திர சம்பிரதாயங்கள் அறிந்தவர் குலகுரு வசிட்டர்.

எந்த முடிவையும் தானே துணிந்து எடுக்கத் தசரதன் விரும்பவில்லை; வீட்டுப் பிரச்சனையாக இருந்தால் தம் மனைவியரைக் கேட்டுச் செய்யலாம்; இதனால், ஏற்படுகின்ற பாதிப்பு நாட்டு மக்களைச் சாரும்; அதனால், அமைச்சர் அவை கூட்டி ஆலோசனை நடத்தினான்.